~~ROMEO~~

Everyday Starts with Happy :)

விட்டுவிட்டேன்








  இதே போன்று உங்களுக்கும் ஏற்படலாம் அல்லது  ஏற்படாமலும் போகலாம் 




சி நாட்களாக வலது காலில் வலி அதிகமாக இருந்தது. கடந்த 3 வருடங்களாக சில நாட்கள் காலில் வலி வந்து பாடாய் படுத்திவிடும். தூங்கும் போது கால்களை நேராக வைத்து படுக்க முடியாது. வலது கால் முழுக்க வலி இருந்து கொண்டே இருக்கும். எப்போது தூங்கினேன் என்றே தெரியாமல் வலியுடன் தூங்கிய நாட்கள் அதிகம். ஏன் எதனால் என்று தெரியாமல் இருந்தேன். 5 மருத்துவர்களை மாற்றி மாற்றி சந்தித்த போது அனைவரும் வலிநிவாரணி மருந்தையே தந்தார்கள். ஒருவர் இது கண்டிப்பாக யானைக்கால் வியாதின் ஆரம்பம் என்றார். அவர் எழுதி குடுத்த மாத்திரையை ஒரு மாதம்  உட்கொண்டேன் ஒரு ப்ரோஜனமும் இல்லை. சென்ற இடம் எல்லாம் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.  நண்பர்கள் சிலரிடம் இதை பற்றி பேசியபோது இது நரம்பு சம்பந்தபட்டது அதனால் அதற்குண்டான மருத்துவரை பார்க்க சொல்லி பரிந்துரைத்தார்கள். 





மருத்துவர்களை பார்த்து பார்த்து ரொம்ப சலித்து போனதால் நரம்பியல் மருத்துவரை சந்திப்பதை சிறிது காலம் தள்ளி போட்டு கொண்டு வந்தேன். இன்நிலையில் எதை சாப்பிட்டாலும் வாந்தி வருவதை நிறுத்த முடியாமல் ரொம்ப கஷ்டப்பட்டேன். டீ , காபி, டிபன், சாப்பாடு என்று எதை சாப்பிட்டாலும் சிறிது நேரத்தில் அது வாந்தியாக வெளிவந்துவிடுகிறது. வெளியே எங்கு சென்றாலும் தண்ணி கூட குடிப்பது இல்லை. வர வர உடல் நிலை மோசமாவதை கண்கூடாக பார்த்தேன் முன்றே வாரங்களில் 4 கிலோ கம்மியாகி போனேன். 

 ஏன் எதற்கு என்று தெரியாமல் வெறுப்பின் உச்சியில் சிலநாட்கள் இருந்தேன் , மாத்திரை சாப்பிட சாப்பிட அதன் மேல் ஒரு வித வெறுப்பு உண்டானது .  மனைவி ரொம்ப பயந்துவிட்டாள் சென்ற முறை ஊருக்கு சென்ற போது இதன் தாகம் அதிகமாக இருந்தது. அங்கு இருக்கும் ஒரு மருத்துவரை பார்க்கும் படி என்னை வற்புறுத்தினாள், சரி என்று அவரை சந்திதேன் அதும் இரவு 10 மணிக்கு மேல் இருக்கும். எனது உடன் நிலையை பற்றி அவரிடம் முழுவதுமாக சொன்னேன். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டவர் ஒரே ஒரு கேள்விதான் கேட்டார்.  

"நீங்க புகைபிடிபவரா  ?" 

ஆம் என்று ஒத்து கொண்டேன்.  உங்களது  அனைத்து பிரச்சனைகளுக்கும் இது தான் காரணம் என்று அவர் சொல்லிய விளக்கங்களை  கேட்ட போது என்னை அறியாமல் உயிரின் மேல் ஒரு வித பயம் வந்துவிட்டது.

புகைபிடிப்பதால் கேன்சர் மட்டுமே வரும் என்று நிறைய பேர் நினைத்து கொண்டு இருகிறார்கள். அது தவறு உங்களுக்கு அல்சர், அஜீரண கோளாறு, முச்சு விடுவதில் சிரமம், கால் வலி போன்று நிறைய வியாதிகள் வருவதற்கு முக்கியமான காரணம் இதுதான் .  உங்கள் கால் நரம்புகளில் செல்லும் இரத்தம் தடைபடும் போது தான் வலியை உணருவீர்கள். இதற்கு ஒரு வழி புகைபிடிப்பதை நீங்கள் நிறுத்த வேண்டும் என்றார். 

உடனே நிறுத்துவது சிரமம் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி விடுகிறேன் என்றேன்.  அது எல்லாம் கூடாது நீங்கள் இப்பவே நிறுத்த வேண்டும், இல்லை என்றால் உங்கள் காலை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்றவர் உதரணத்துக்கு ஒன்றையும் சொன்னார். என்னை போன்றே ஒருவர் கால் வலி  சிகிச்சைக்காக வந்தார் அவருக்கும் இதே போன்று வலி இருந்தது. மருத்துவர் எவ்வளவோ முறை எடுத்து சொல்லியும் புகைப்பதை அவர் நிறுத்தவேயில்லை அதனால் அவரின் ஒரு கால் எடுக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது, எடுத்தும் விட்டார். 

இதை கேட்கும் போதே நினைத்து கொண்டேன் இந்த சனியனை விட்டோழிய வேண்டும் என்று. 

அதை செயல்படுத்த என்னால் முடியவில்லை. கண்டிப்பாக நான் புகைப்பதை நிறுத்த வேண்டும் என்கிற சூழ்நிலையில் இருக்கிறேன். எப்பொழுதும் மனம் புகைப்பதை பற்றியே சிந்தித்து கொண்டு இருக்கிறது . எந்த வேலையும் ஒழுங்காக செய்ய முடியவில்லை, காலையில் எழுந்தது முதல் சிந்தனைகள் எல்லாம் அதிலே முழ்கி இருக்கும். எப்போது வெளியே போகலாம் புகைக்கலாம் என்று சிந்தனைகள் சிதறடித்து இருக்கும். எனது நிலையில் நான் உறுதியாக இருக்கவேண்டும் என்று மிக தீவிரமாக இருக்கிறேன். புகைப்பதை நிறுத்துவது அவ்வளவு எளிது அல்ல என்பதை 3  நாட்களில் தெரிந்துகொண்டேன். குடும்பத்தை நினைக்கும் போது எனது செயலில் நான் உறுதியாக இருக்க வேண்டும் என்கிற முனைப்பு அதிகமாகி கொண்டு இருக்கிறது. வெகு சிரமத்துக்கு பிறகு இப்பொழுது முழுவதுமாக நிறுத்தி விடுவேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது.  நிறுத்தியவுடனே எனது உடலில் பல பல மாற்றங்களை நான் சந்திப்பேன் என்றால் அது சுத்த பொய். கொஞ்சம் கொஞ்சமாக உடல் நிலை தேரும். அதே சமயம் மனதை கட்டுபாடுடன்  வைத்துகொள்ள வேண்டும். தவறை திருத்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது அதை நான் பயன்படுத்திய ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். 

 நண்பர்களுடன் நானும் ரவுடி தான் என்கிற திமிரில் ஆரமித்த பழக்கம், 15 ஆவது வயதில் இருந்து தினமும் என்னுடன் வந்துகொண்டு இருக்கிறது. இது தவறு என்று தெரிந்தே அதனுடன் உறவாடிய நாட்கள் அதிகம். வாழத்தான் வேண்டும் என்கிற நிலை வரும் போது பிரிவது நன்று தான். 

விட்டுவிடுவோம் புகையை  


With love
Romeo ;)