~~ROMEO~~

Everyday Starts with Happy :)

படித்து முடித்த புத்தகம் - நான் வித்யா


நான் வித்யா

ஒரு புத்தகத்தின் முதல் அத்தியாயத்தை படித்து முடித்த போது உங்களுக்கு என்ன தோன்றும்?? சுவாரசியமா இருக்கு என்று அடுத்த அத்தியாயம் படிக்க செல்வோம், ஆரம்பமே அதிரடி திருப்பம் வருதே என்று ஆச்சரியப்படுவோம் அல்லது ஒண்ணுமே புரியல என்று திரும்ப முதலில் இருந்து ஆரமிப்போம். ஆனால் இந்த புத்தகத்தின் முதல் அத்தியாயத்தை படித்து முடித்த உடன் மேலும் படிக்க வேண்டுமா என்று எனக்கு தோன்றியது. ஆரம்பமே நம்மை உலுக்கி எடுக்கும் பால் மாற்று அறுவை சிகிச்சை! (அதை சிகிச்சை என்று சொல்வது அபத்தம்) அந்த வலி வேதனைகளை வெறும் சொற்களால் படிக்கும் நமக்கே இவ்வளவு வேதனை தரும் போது அதை அவர் எப்படி தாங்கி கொண்டார் என்கிற கேள்வி நம்முன் கண்டிப்பாக எழும்.


ஓவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருகிறாள். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கிறான். ஒரு ஆணுக்குள் இருக்கும் பெண்தன்மை அதிகம் ஆவதால் அவர்கள் படும் வேதனை கொஞ்சம் நஞ்சம் இல்லை. அப்படிப்பட்ட உணர்வுகளை வாய் வழியில் மட்டுமே கேட்டு தெரிந்து இருப்போம், அதுவே ஒரு புத்தக வடிவில் ரொம்ப ஆழ் சென்று ஒரு திருநங்கை அனுபவித்த வேதனைகள், கொடுமைகள், சந்தோசங்கள், அடிகளை கொஞ்சமும் தயங்காமல் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் முன்னாள் சரவணன் என்கிற இந்நாள் வித்யா. அந்த பெண் தன்மை அதிகமாக இருகிறவர்களின் வேதனை சாதரண மனிதர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அதை அவர்கள் தெரிந்துகொள்ளவும் முயற்சி செய்வதும் இல்லை. அவர்களுக்கு கொஞ்சமாவது அதை பற்றி தெரிந்து கொள்ள செய்யும் ஒரு முயற்சி என்றே சொல்லலாம் இந்த "நான் வித்யா" புத்தகம்.


முன்று வருடங்களுக்கு முன் ஜூனியர் விகடன் பத்திரிகையில் கௌதம் மேனன்னை சாரமாறியாக திட்டி இவர் அளித்த பேட்டியின் முலமாக இவரின் வலை பூவை வாசிக்க நேர்ந்தது . இவரின் வலை பூவிலும் கௌதம் பற்றி இவ்வளவு தைரியமாக கடும் சொற்கள் உபயோகித்து உள்ளதை படிக்கும் போது இவர் மற்ற திருநங்கை போல் இல்லை வேறு மாதிரியானவர் என்று என்னை ரொம்ப ஆச்சரிய பட வைத்தார்.


முன்றாம் பாலினம் எப்படி உருவாகுகிறது என்று அறிவியல் ரீதியாக புட்டு புட்டு வைக்கலாம். ஆனால் அவர்களின் மன வேதனையை எந்த ஒரு அறிவியலாலும் சொல்ல முடியாது. ஆணும் அல்லாமல் பெண்ணும் அல்லாமல் இவர் பட்ட வேதனைகளை மிகவும் வலியுடன் எழுதி உள்ளார். வித்யாவின் ஆரம்ப கால வாழ்கை என்பது சராசரி மனிதர்களை போன்று அம்மா, சகோதிரிகளின் அன்பு , அப்பாவின் அடி உதை மிரட்டல் என்று இருந்தாலும் சிறு வயதிலே பெண்தன்மையை இவர் அடையாளம் கொண்டு அந்த வயதில் இருந்தே ஒரு பெண்ணாக மனதுக்குள் வாழ்ந்துகொண்டு இப்பொது பெண்ணாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார். ஒரு ஆண் உருவில் இருக்கும் பெண்ணை எப்படி எல்லாம் கிண்டல் கேலி செய்கிறார்கள் என்று இவர் விலகி அதற்கு அவரின் எதிர் கருத்துகளை படிக்கும் போது ஏன் இவர்களை நாம் கிண்டல் செய்கிறோம் என்று நமக்கு நாமே கேட்டு கொள்ளும் கேள்வி எழத்தான் செய்கிறது.


பள்ளி படிப்பு , பிறகு கல்லூரி கணினியில் இளங்கலை பின்பு நாடகத்தின் மேல் இருந்த காதலால் முதுகலையில் மொழியியல், அதன் பிறகு நாடகம் , ஆண் உருவை அறுத்து ஏறிய வேண்டும் என்கிற வெறியால் புனே சென்று பிச்சை எடுக்கும் அவலம், நிர்வாணம், பின்பு திரும்ப திருச்சி , பிறகு மதுரை, இப்பொழுது சென்னை. இவ்வளவு இளவயதில் சுயசாரிதம் எழுவது என்பது யாருக்கும் பாக்கியம் கிடைக்காது. கிடைத்தாலும் அவர் இந்த அளவுக்கு தன்னை பற்றி உண்மையை சொல்லுவார என்கிற கேள்வியும் எழும் கண்டிப்பாக. கடைசியாக இவரின் புத்தகத்தில் எழுதி உள்ள இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது.


"சொர்க்கம் வேண்டும் என்று நான் கேட்கவில்லை. நரகம் வேண்டாமே என்று தான் மன்றாடுகிறேன். எனக்காகவும் என்னைப் போன்ற பிற திருநங்கைகளுக்காகவும் . புரிந்துகொள்விர்களா?""

புரியாதவர்கள் இந்த புத்தகத்தை படியுங்கள் கண்டிப்பாக புரிந்து கொள்விர்கள்.

திருநங்கைகள் வாழ்கை முறை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது , சேலத்தில் கூட திருநங்கைகள் மட்டுமே வேலை செய்யும் ஒரு உணவு விடுதியை திறந்து உள்ளார்கள்.


இந்த புத்தகத்தை படித்ததும் இவரின் பிடிவாதம் எவ்வளவு வலிமையானது , இதை செய்ய வேண்டும் என்றால் கண்டிப்பாக செய்து முடித்து விட வேண்டும் என்கிற வெறி அதற்காக எது வேண்டும் என்றாலும் செய்ய தயார் என்பதை முதுகலை படம் பெற்ற பிறகு கொஞ்சம் கூட கூச்சம் படாமல் பிச்சை எடுத்தது, இந்த வேலைக்கு தான் செல்வேன் என்று அதில் சாதித்தது என்று தான் செய்ய நினைக்கும் எல்லாவற்றையும் பொறுமையாக எடுத்த காரியம் முடியும் வரை இடையில் வந்த தடைகளை உதறி தள்ளி அசிகங்களை சகித்து கொண்டு வாழ்கையில் எதிர் நீச்சல் போட்டு கொண்டு இருக்கும் வித்யாவுக்கு என்னுடைய நேச கரங்கள் காத்து கொண்டு இருக்கிறது அவருடன் கை குலுக்க.