~~ROMEO~~

Everyday Starts with Happy :)

படித்து முடித்த புத்தகம் - நான் சந்தித்த மரணங்கள்

என்னை ரொம்ப பாதித்த ஒரு மரணம் என்றால் அது எனது தம்பி மரணம் தான். எனது சித்தப்பாவின் மகன், அவன் மறைந்த போது வயது 20க்குள் தான் இருக்கும். ரொம்ப அமைதியான சுபாவம் கொண்டவன் யாரிடமும் அதிகம் பேசமாட்டான். ஒல்லியான உடல்வாகு கொண்டவன். அவனும் எனக்கும் சிறிய கைகலப்பு நடந்தது அது ஒரு சின்ன விடயம் தான், அப்பொழுது நானும் கொஞ்சம் அவரசப்பட்டேன், அவன் அப்போது சிறியவன் அதனால் அவனுக்கு அவன் செய்யும் காரியம் பெரிதாகப்படவில்லை, என்னை ஒருமையில் அழைத்தால் கொஞ்சம் கடுமையாக நான் நடந்து கொள்ளவேண்டியது ஆயிற்று. அந்த சம்பவம் நடந்த சிறிது நாட்களுக்கு பிறகு அவனிடம் சகஜமாக பேச ஆரமித்தேன். நான் கோவையில் இருந்து சென்னைக்கு குடி பெயர்ந்த சமயம் ஒரு நாள் எனது சித்தப்பா கைபேசியில் அழைத்து அவனின் மறைவு பற்றி சொன்னார். என்னால் நம்பவே முடியவில்லை. நட்ட நடு சாலையில் அழுதேன், இதற்கு முன்னால் யாருடைய மரணத்துக்கும் இந்த மாதிரி அழுதது இல்லை. அடித்து பிடித்து அவனை வைத்து இருந்த பிணவறை சென்றேன் ஒரு மூட்டையில் அவனை கட்டி வைத்து இருந்தார்கள். ரொம்ப கொடுமையான நிகழ்வு அது, எனது மனதை விட்டு நீங்காத வடுவாங்க அமைந்துவிட்ட சம்பவம். இப்போது நினைத்தாலும் மனதில் ஏதோ ஒரு பாரம் அழுத்துவது போல இருக்கும்.


இதே மாதிரி நம்மில் நிறைய மனிதர்கள் தங்களில் வாழ்கையில் சந்தித்த ஒரு மரணத்தையே தாங்க முடியாமல் , மறக்க முடியாமல் இருக்கிறோம். ஆனால் தனது வாழ்கையில் பிறந்தது முதல் இப்பொழுது வரை தான் நேசித்த மனிதர்களின் மரணங்களைஅருகில் இருந்து பார்த்தே வாழ்ந்துகொண்டு இருக்கிறார் மரண கானா விஜி.

நான் சந்தித்த மரணங்கள் புத்தகத்தில் மரண கானா விஜி தனது வாழ்கையில் சந்தித்த மரணங்களை பற்றி கூற கார்கோ அதை தொகுத்துள்ளார்.

அவரின் வாழ்க்கை எங்கு இருந்து தொடங்கியது, எப்படி நண்பர்கள் சேர்ந்தார்கள், மெரினா பீச்சில் நடக்கும் கொடுமைகள், சுடுகாடு வாழ்க்கை, காதல், காமம், பாசம், பணம், கானா என்று அவரின் வாழ்கையில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை கொண்டது இந்த புத்தகம்.

புத்தம் வாங்கி இதுவரை 5 முறைக்கு மேல் படித்துவிட்டேன், மரணங்களை வெகு அருகில் இருந்து பார்த்தது போல இருக்கிறது ஒவ்வொரு சம்பவமும். ஒரு பிரிவு என்பது நம்மை எப்படி எல்லாம் துன்பப்படுத்துமோ அதே போன்று தான் இந்த புத்தகத்தை படிக்கும் போது ஏற்படுகிறது.

எனக்கு தெரிந்து தமிழில் மரணங்களை மட்டுமே சொல்லிய ஒரு புத்தகம் இதுவரை வந்தது இல்லை. ரொம்ப சுவாரசியம் எல்லாம் இல்லை, ஆனால் படிக்கும் போது ஏதோ நம்மில் ஒருவர் இறந்தால் ஏற்படும் ஒருவித வெறுமையை போன்று மனதில் சூழ்ந்துகொள்கிறது.

புத்தகத்தில் சில குறைகள் இருப்பது என்னவோ உண்மை ,
மச்சான் மச்சான் என்று நிறைய இடத்தில வருவது, ஒரு இடத்தில் தான் செய்த தப்புக்கு மக்களிடம் அவரே தண்டனை தர சொல்லி கேட்ப்பது, இப்படி மிக சில விஷயங்களை தவிர்த்து இருந்தால் நன்றாக இருக்கும்.
புத்தகம் கிடைக்கும் இடம்

நான் சந்தித்த மரணங்கள்
மரண கானா விஜி
தொகுப்பு : கார்க்கோ
விலை : ரூ. 40/-
கருப்பு பிரதிகள்
பி - 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை,
சென்னை - 600 005
தொலைபேசி : 94442 72500
மின்னஞ்சல்: karuppu2004@rediffmail.com------------------------------------------------------------------------------------


(பி. கு): இந்த புத்தகத்திற்கு பிறகு வேறு ஒரு புத்தகம் படித்தேன் .

என் வாழ்கையில் இந்த மாதிரி ஒரு புத்தகத்தை படித்து அதனால் சிறிது நேரத்திற்கு எல்லாம் என்னை சொர்கத்திற்க்கு அழைத்து சென்றது ஏதும் இல்லை. (பலான புக் இல்லீங்கோ)

அந்த வெகு சூடான புத்தகத்தை பற்றி அடுத்த பதிவில். .
with love
Romeo ;)