
சாருவை நான் எப்படி எல்லாம் கொண்டாடுவேன் என்று எனக்கே தெரியாது. அவரின் எழுத்துகளுக்கு அடிமை என்றே சொல்லலாம் அவ்வளவு வெறி அவரின் எழுத்துகளை படிப்பதற்கு. இணையத்தளத்தில் இவரின் வலைதளத்தை திறக்காத நாள் இல்லை.இன்று என்ன எழுதி இருப்பார் என்று தினமும் அவரின் வலைத்தளத்துக்கு சென்று வருவேன். நான் கொண்டாடும் எழுத்தாளரின் புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டேன்.
சாருவின் 10 புத்தகங்கள் வெளியீட்டு விழா, சென்ற சனிக்கிழமை மாலை பிலிம் சேம்பர் ஹாலில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டேன். தனது வசீகர குரலால் தொகுத்து வழங்கினார் நிர்மலா பெரியசாமி. கவிஞர் மனுஷபுத்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார். முதும் பெரும் எழுத்தாளர் கந்தசாமி புத்தகங்களை வெளியிட எஸ். ராமகிருஷ்ணன், அழகிய பெரியவன், பாரதி கிருஷ்ணகுமார் , ஷாஜி, மதன் பாப், இயக்குனர் மிஷ்கின் , இயக்குனர் வசந்தபாலன், திருநங்கை கல்கி, செல்வி , அவந்திகா போன்றோர் பெற்று கொண்டனர்.
எழுத்தாளர் கந்தசாமி பேச்சில் சாரு எழுதுவதை ரொம்ப ரசனையாக சொன்னார். இவரின் பேச்சை கேட்கும் போது இலக்கிய உலகில் பலமான அனுபவம் கொண்டவர் என்று தெரிந்தது.
அழகிய பெரியவனின் பேச்சு ஆரம்பம் முதல் கடைசி வரை ரொம்ப சீரியஸ் டைப்ஆக இருந்தது. சிறுபான்மை இனத்தவர்கள் மீது நடைபெறும் வன்முறைகளை கடுமையாக எதிர்த்தார், அதே சமயம் ஹிந்துத்தவாதிகள் மற்றும் ஜெயமோகன் அவர்களை கடுமையாக விமர்சித்தார்.
மதன் பாப் எதற்கு அழைத்தார் என்று தெரியவில்லை, அவர் என்ன பேச வருகிறார் என்றும் தெரியவில்லை. சிரித்தார் பேசினரே தவிர சிந்திக்க ஒன்றும் இல்லை அவரின் பேச்சில்.
ஷாஜி ரொம்ப சாதரணமாக ஆரமித்து நகைச்சுவையாக பேசினார். சாருவுடன் தனக்கு இருக்கும் நட்பு, அவரின் எழுத்துகளை தான் எப்படி எல்லாம் மொழி மாற்றம் செய்கிறேன் என்றும். மலையாள இலக்கிய உலகில் இவருக்கு இருக்கும் மரியாதையை முதலில் பேசிவிட்டு, கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் என்கிற புத்தகத்தில் உள்ள முக்கால் வாசி தலைப்புகளை பற்றி பேசி அமர்ந்தார். மிக நீண்ட பேச்சு இவருடையது.
தனது குழந்தைக்கு உடம்பு சரியில்லாத போதும் விழாவில் கலந்து கொண்டு அருமையாக பேசினார் இயக்குனர் வசந்தபாலன். தனது வெயில் படத்தை சாரு விமர்சிக்காத குறையை அங்கே பகிர்ந்து கொண்டார். அமீர்க்கு கிடைக்க போகும் மிளகா பொடியை நாசுக்காக வெளிபடுத்தினார், தமிழ் சினிமாவை சாரு கிழி கிழி என்று கிழிப்பதை சிரித்து கொண்டே சொன்னவர், ஒரு படம் நன்றாக இல்லையென்றால் எப்படி எல்லாம் கிழிபாரோ அதே சமயம் நன்றாக இருக்கும் படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதை சொல்லி சந்தோசப்பட்டார்.
கல்கி பேசும் போது தங்கள் பாலினத்தவர்கள் சமுதாயத்தில் எப்படி எல்லாம் வஞ்சிக்கபடுகிறார்கள் என்று பேசினார். எந்த பார்வையாளனும் இடையில் கைதட்டாமல் கேட்ட ஒரே விருந்தினர் பேச்சு இவருடையது தான். அது ஏன் என்று தெரியவில்லை ஒருவேளை இவர் மாற்று பாலினத்தை சேர்ந்தவரா அல்லது இவரின் பேச்சு மற்றவர்களை போல ரசனை இல்லாததால் என்று தெரியவில்லை. பேச்சை முடிக்கும் முன்னர் தனக்கு அவ்வளவுவாக மேடைகளில் பேசவராது என்று ஒத்துக்கொண்டார்.
பாரதி கிருஷ்ணன் பேச்சு ரொம்ப சுவாரசியமாகவும் , நகைச்சுவையுடனும் ஆரமித்தது நேரம் செல்ல செல்ல இவரின் பேச்சு ரொம்ப சிரியஸ் ஆக சென்றது. கீழ் வெண்மணியில் நடந்த தலித் படுகொலை, கும்பகோணத்தில் நடந்த தீ விபத்தில் பலியான 94 குழந்தைகள் என்று இவரின் பேச்சு அனல் கக்கியது , நிதிபதிகளை கூட விட்டு வைக்காமல் அடித்து விள்ளசினார். இவர் இடையில் சொன்ன ஒரு வார்த்தை என்ன என்று எனது மண்டையை போட்டு குழப்பி கொண்டேன். அந்த கேள்வி என்னவென்று கடைசில் கேட்கிறேன் பதில் தெரிந்தவர்கள் பின்னுடத்தில் சொல்லவும்.
எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் பேசும் போது தனக்கும் தனது வாசகர் இருவருக்கும் நடந்த கடித போக்குவரத்தை சுவைப்பட சொன்னார். சாரு இங்கே உட்கார்ந்து கொண்டு மலாவி தேசத்தை எப்படி எல்லாம் வர்ணித்தார் அதற்கு அவரின் வாசகர் ஆனந்த் அதை எப்படி எடுத்து கொண்டார் என்றும், அந்த புத்தகத்தை படிக்கும் போது சாரு மலாவி தேசத்தில் இருப்பதாய் போன்றும் ஆனந்த் மயிலாப்பூரில் இருப்பது போன்றும் இருக்கிறது என்றார். அருமையான எழுத்தாளர் இவரின் புத்தகவெளியிட்டு விழாவிற்கு செல்லாமல் இருந்தது எனக்கு ஏமாற்றமே.
இயக்குனர் மிஷ்கின் பேச்சு அதி தீவிர இலக்கிய படிப்பாளி போன்று இருந்தது, வாயில் நுழைய தெரியாத பெயர்களை எல்லாம் சொன்னார் , நினைவுபடுத்தி பார்கிறேன் !!!! சுத்தம் ஒருத்தர் பெயரும் நினைவுக்கு வரவில்லை. சாருவிற்கு தான் எப்படி அறிமுகம் ஆனேன் என்று சொன்னதை கேட்டு அரங்கத்தில் இருந்த அணைத்து அன்பர்களும் நெடு நேரம் கைதட்டினார்கள். தனது நந்தலாலா படம் பற்றி சிரிது நேரம் பேசி அந்த கதை எனது அண்ணன்னின் பதிப்புதான் என்றதும் அரங்கமே சிரிது நேரம் அமைதியாக இருந்தது என்பதே உண்மை. ரசனைகார மனிதர் சாருவை போலவே தண்ணி அடிப்பதை சந்தோசமாக ஒத்து கொண்டார். சாருவுடன் சேர்ந்து தண்ணி அடிக்க போகிற நாளை எதிர்பார்த்து கொண்டு இருப்பதாக உண்மையை அரங்கத்தில் பகிர்ந்து கொண்டார்.
கடைசியாக விழாவின் நாயகன் சாரு பேசும் போது எப்பயும் போல நக்கல் நையாண்டி என்று இவரின் எழுத்துகளை போல இருந்தது பேச்சு. தனக்கு உடம்பு சரியில்லாத போதும் உயிர்மை பதிப்பகத்தில் செலவிட்ட நாட்களையும், தள்ளாடி நடந்து என்ற போது கூட தான் தண்ணி அடித்து வந்து இருக்கிறேன் என்று நினைத்து கொண்ட உயிர்மையில் வேலை செய்யும் அன்பர்கள் என்று சிரித்து கொண்டே சொன்னார். மறக்காமல் தனக்கு உதவி செய்த அணைத்து அன்பர்களுக்கும் நன்றியை சொன்னார். மதன் பாப் ரொம்ப ரசனைகார மனிதர் இப்பொது கூட தண்ணி அடிப்பதை தனது வீட்டில் வைத்து கொள்ளலாம் வாங்க என்கிற உண்மையை சபையில் நகைச்சுவையுடன் பேசினார். அகநாழிகை புத்தக வெளியிட்டு விழாவில் தான் இவரின் பேச்சை முதல் முதலில் கேட்டேன், அன்று என்னை யாரவது பார்த்து இருந்தார்கள் என்றால் என்னை பார்த்து சிரித்திருப்பார்கள். உண்மையில் வாயை திறந்து கொண்டு தான் நான் இவரின் பேச்சை கேட்டு கொண்டு இருந்தேன். மிக பெரிய சந்தோசத்தை குடுத்த நாள் அது.
கேள்வி : நிர்வாணம் அல்லது அம்மணம் அல்லது ??? அந்த வார்த்தை என்ன ?? பதில் தெரியுமா ?
விழாவை பற்றி எழுத இன்னும் இருக்கிறது அதனால் இரண்டு பகுதியாக எழுதுகிறேன். விழாவில் நடந்த சில சுவாரசியமான தொகுப்பு அடுத்த பதிவில் .