~~ROMEO~~

Everyday Starts with Happy :)

ரயில் பயணங்கள் - 2

பயணங்கள் - 2






சென்ற கட்டுரையில் கோவைக்கு சென்றதை எழுதி இருந்தேன், இந்த கட்டுரை அதன் தொடர்ச்சி கோவையில் இருந்து சென்னைக்கு வந்தது.

கும்பலாக இருந்து கும்மி அடித்து கொண்டு இருந்தோம் கல்யாணத்தில் , அத்தை மகள் ஒருத்தியை பார்த்ததும் ரொம்ப ஆச்சரியப்பட்டு போனேன். அவளின் கலயாணத்துக்கு முன்பு தேவதை போல இருந்தாள். நல்ல வளத்தி, ஒல்லியாக ரொம்ப அழகாக இருப்பாள். அவளின் இரண்டு கன்னங்களில் விழும் அந்த குழியை பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும் அதற்காகவே அவளை சிரிக்க சொல்லுவேன் அது பள்ளி காலத்தில். அப்போது அவளின் மேல் எந்த ஒரு ஆசையும் இல்லை ஒரு சிறுவன் சிறுமி விளையாட்டு போல இருந்தது . அவள் கல்யாணம் முடிந்து போன பிறகு அவளை பார்க்கவே இல்லை கிட்டதட்ட 3 வருடங்கள் கழித்து இந்த கல்யாணத்தில் சந்தித்த போது ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. உடம்பில் சதை போட்டு இருந்தாள் பார்ப்பதற்கு 30 வயது போல இருந்தாள். என்னால் நம்பவே முடியவில்லை இவளா என்று. நான் இருப்பதை எங்கிருந்தோ பார்த்தவள் ரொம்ப சந்தோசமாக வந்து என்னருகில் வந்து அமர்ந்தாள் குழந்தையுடன். வெகு நாட்களுக்கு பிறகு பார்த்ததினால் வார்த்தைகள் ஆதிகமாக வரவில்லை. கொஞ்ச நேரத்தில் சகஜமாக பேச ஆரமித்தோம். பேச்சு நீண்டு கொண்டு இருந்தது எங்களின் தற்போது வாழ்கை எப்படி செல்கிறது என்கிற கேள்வி எழும் போது அவள் உச் கொட்டினாள் சென்னை போன்ற பரபரப்பு நகரத்தில் வளர்ந்தவள் குமாரபாளையத்தில் கல்யாணம் கட்டி கொண்டு சென்றதால் வந்த விரக்தி. . இந்த தருணத்தில் எதாவது பேசி சங்கட பட வைக்க வேண்டம் என்று வேறு பேச்சு பேச ஆரமித்தோம். கடைசியாக விடைபெறும் நேரத்தில் அவளை சிரிக்க சொன்னேன் எதற்கு என்றவளின் கன்னங்களை பார்த்தேன் அந்த குழி மட்டும் மாறவில்லை.


அன்று மதியமே கோவை எக்ஸ்பிரஸ்ல் அப்பா, அம்மா உடன் கிளம்ப வேண்டிய கட்டாயம். முன்பே முன்பதிவு செய்ததினால் இந்த தடவை டிக்கெட் பரிசோதகரை எதிர் பார்க்காமல் எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். சொந்த பந்தங்கள் உடன் நிறைந்து இருந்த கல்யாண மண்டபத்தில் இருந்த சந்தோஷம் இப்பொது காணாமல் போனதை உணர்ந்தேன். இந்த மாதிரி மதியம் செல்லும் ரயில் பயணத்தில் ஒரு சவுகரியம் ரயில்க்குள்ளே விற்றுக்கொண்டு வரும் திண்பண்டங்கள் தான். கட்லெட், சமோசா , வடை, நிமிடத்துக்கு ஒரு முறை வரும் டீ, காபி , கூல் ட்ரிங்க்ஸ், மாலை வேளையில் வரும் தக்காளி சூப் , மசால் தோசை, பிரட் அம்லேட் தின்னுவதற்கே 200 ருபாய் அழவேண்டும். ரயிலில் வரும் மற்ற விற்பனையாளர்கள் புத்தகங்கள் , குழந்தைகளுக்கு ஆனா விளையாட்டு பொருட்கள், முறுக்கு, கண் தெரியாதவர்கள் விற்றுக்கொண்டு இருந்த டோர கலரிங் புக் இவைகளுடன் புது படங்களை கூட ஒருவர் விற்றுக்கொண்டு வந்தார்.



தூக்கம் கண்ணை முடியதால் திருப்பூர் தாண்டி சேலம் வரை நன்றாக தூங்கி கொண்டு வந்தேன் உட்கார்ந்தபடியே. சேலத்தில் கூட்டம் கொஞ்சம் ஏறியது படிப்பதற்கு புத்தகம் ஏதும் இல்லாமல் ரொம்ப எரிச்சலாக இருந்தது. பகல் நேர பயணங்களில் புத்தம் இல்லாமல் நான் புறப்படமாட்டேன் அன்று அவசரம் காரணமாக ஏதும் எடுத்து கொண்டு வரவில்லை. சிறிது நேரம் வேடிக்கை பார்ப்பது சிறிது நேரம் கதவு அருகில் நின்று கொண்டு வருவது என்று நேரத்தை கழித்து கொண்டு வந்தேன். வண்டி ஆம்பூர் தாண்டி சென்று கொண்டு இருந்தது. கழிவறை செல்ல எழுந்தேன் அதன் அருகில் சிலர் கீழே எதோ பார்த்து கொண்டு இருந்தார்கள் என்னவாக இருக்கும் என்கிற ஆவலில் நானும் பார்த்தேன் பார்வையற்றவர் ஒருவர் உட்கார்ந்து கொண்டு இருந்தார். பக்கத்தில் நின்று கொண்டு இருந்தவரிடம் என்னவென்று விசாரித்தேன். கதவுக்கு நடுவில் இருக்கும் ஜன்னல் முடும் போது இவரின் விரல்கள் அடி பட்டு விட்டது என்றார். ரயில்களில் இரண்டு ஜன்னல்கள் இருக்கும் ஒன்று கண்ணாடியால் ஆனது , மற்றொன்று இரும்பால் ஆனது. இரும்பால் ஆனா ஜன்னல் தான் இவரின் விரல்களை பதம் பார்த்து இருந்தது.


கூடி இருந்த ஒருவர் கூட அவருக்கு எந்த உதவியும் செய்ய முன் வரவில்லை. அந்த விரல்களை பிளாஸ்டிக் பேப்பர் கொண்டு சுற்றி இருந்தார். ரத்த போக்கு அதிகமாக இருந்ததை அவர் பேன்ட் காமித்தது , ரத்தத்தை அவர் பேண்டில் துடைத்து இருந்தார் போல. பார்த்ததும் என்னால் இவர்களை போல வேடிக்கை பார்க்க முடியவில்லை. கும்பலில் இருந்த ஒருவர் முதலுதவி பெட்டி எங்கு இருக்கும் என்று டீ விற்கும் ஒருவரிடம் கேட்டு கொண்டு இருந்தார். இது எல்லாம் வேலைக்கு ஆகாது என்று அவர் எழுப்பி விரல்களில் சுற்றி இருக்கும் பிளாஸ்டிக் கவர்யை நீக்கினேன். ரத்தம் உறைந்து போய் இருந்தது அவர் கை முழுக்க ரத்த கறைகள். சுற்றி இருந்தவர்களின் அலச்சியம் அப்போது தான் தெரிந்தது. அவரின் உடை ரொம்ப அழுக்காகி இருந்தது ஒருத்தரும் உதவிக்கு வராதது கண்டு என்னை அறியாமல் கோவப்படேன். ஒரு இளைஞர் கொஞ்சம் போல பஞ்சு கொண்டு வந்தார் அதை தண்ணிரில் நனைத்து உறைந்து போன ரத்த கறைகளை சுத்தம் பண்ணினேன். அந்த பஞ்சு போதுமானதாக இல்லை. எனது கைக்குட்டையை தண்ணிரில் நனைத்து முடிந்த வரை சுத்த படுத்தினேன். பிறகு அதை வைத்தே அவரின் கைகளை சுற்றி விட்டேன். காட்பாடி சென்றதும் ஸ்டேஷன் மாஸ்டர் ரூம்ல முதலுதவி பெட்டி இருக்கும் அவர்களிடம் மருந்து வைத்து கொள்ளுங்கள் என்றேன். "அது எல்லாம் வேண்டம் சார் அவங்க எங்களுக்கு எல்லாம் உதவ மாட்டாங்க" என்றார். அவரை பார்ப்பதற்கு ரொம்ப பாவமாக இருந்தது அதை சொல்லும் போதே ஒரு வித விரக்தியை அவரின் பேச்சில் தெரிந்தது. சரி டாக்டர் போய் பாருங்க காயம் ஆழமாக இருக்கும் போல இருக்கு என்றேன். சரி என்றார் இதிலும் அதே விரக்தி.

எனது இருக்கையில் வந்து அமர்ந்தேன் மனம் அவரின் இந்த நிலைமையை நினைத்து கேள்விகளை அடுக்கிக்கொண்டு சென்றது. தனக்கு எங்கு காயம் பட்டு இருக்கிறது என்று கூட தெரியாமல், யாரிடம் உதவி கேட்பது என்றும் தெரியாமல் , ரத்த கரைகளை எப்படி சுத்தபடுத்துவது தெரியாமல் அவரின் கண்களை பறித்த இறைவனை திட்ட வேண்டும் போல இருந்தது. ஆனால் திட்ட மனம் வரவில்லை அதற்கு பதில் நன்றியை தான் சொன்னேன் அவருக்கு என்னால் முடிந்த உதவி செய்ததுக்கு.

காட்பாடி ரயில் நிலைத்தில் அவர் இறங்கினர் , ஓடி சென்று வலியின் திவிரத்தை கேட்டேன். இப்ப வலி இல்ல சார் என்றார். பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு டாக்டரிடம் செல்லுமாறு சொன்னேன். வேண்டாம் சார் என்று எதோ ஒரு ஆயில்மேன்ட் பெயரை சொல்லி அதை பூசினால் சரியாகிடும் என்றார். காயம் ஆழமாக இருக்கிறது எதுக்கோ நீங்க டாக்டர் பாருங்க என்றேன், இப்போதும் அதே போல விரக்தியின் சிரிப்பு. பார்க்கலாம் சார் உங்க உதவிக்கு நன்றி என்றார்.

எனக்கு புரிந்தது அவரிடம் பணம் இல்லை என்று. எனது பாக்கெட்யில் கைவிட்டேன் 120 ருபாய் இருந்தது. 100 ருபாய் எடுத்து அவரிடம் குடுத்தேன், வேண்டாம் என்று ரொம்ப மறுத்தார் , நான் விடாமல் அவரின் சட்டை பாக்கெட்யில் திணித்தேன். முதலில் டாக்டர் பாருங்க என்றேன் ரயில் கிளம்பியது. அவரிடம் இன்னொரு முறை இதே ரயிலில் வரும் போது சந்திக்கலாம் என்று சொல்லி விடைப்பெற்றேன்.

இறைவனுக்கு இன்னொரு முறை நன்றி சொன்னேன் அவருக்கு திரும்ப உதவி செய்ய வைத்ததற்கு.

படித்து முடித்த புத்தகம் - நான் வித்யா


நான் வித்யா

ஒரு புத்தகத்தின் முதல் அத்தியாயத்தை படித்து முடித்த போது உங்களுக்கு என்ன தோன்றும்?? சுவாரசியமா இருக்கு என்று அடுத்த அத்தியாயம் படிக்க செல்வோம், ஆரம்பமே அதிரடி திருப்பம் வருதே என்று ஆச்சரியப்படுவோம் அல்லது ஒண்ணுமே புரியல என்று திரும்ப முதலில் இருந்து ஆரமிப்போம். ஆனால் இந்த புத்தகத்தின் முதல் அத்தியாயத்தை படித்து முடித்த உடன் மேலும் படிக்க வேண்டுமா என்று எனக்கு தோன்றியது. ஆரம்பமே நம்மை உலுக்கி எடுக்கும் பால் மாற்று அறுவை சிகிச்சை! (அதை சிகிச்சை என்று சொல்வது அபத்தம்) அந்த வலி வேதனைகளை வெறும் சொற்களால் படிக்கும் நமக்கே இவ்வளவு வேதனை தரும் போது அதை அவர் எப்படி தாங்கி கொண்டார் என்கிற கேள்வி நம்முன் கண்டிப்பாக எழும்.


ஓவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருகிறாள். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கிறான். ஒரு ஆணுக்குள் இருக்கும் பெண்தன்மை அதிகம் ஆவதால் அவர்கள் படும் வேதனை கொஞ்சம் நஞ்சம் இல்லை. அப்படிப்பட்ட உணர்வுகளை வாய் வழியில் மட்டுமே கேட்டு தெரிந்து இருப்போம், அதுவே ஒரு புத்தக வடிவில் ரொம்ப ஆழ் சென்று ஒரு திருநங்கை அனுபவித்த வேதனைகள், கொடுமைகள், சந்தோசங்கள், அடிகளை கொஞ்சமும் தயங்காமல் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் முன்னாள் சரவணன் என்கிற இந்நாள் வித்யா. அந்த பெண் தன்மை அதிகமாக இருகிறவர்களின் வேதனை சாதரண மனிதர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அதை அவர்கள் தெரிந்துகொள்ளவும் முயற்சி செய்வதும் இல்லை. அவர்களுக்கு கொஞ்சமாவது அதை பற்றி தெரிந்து கொள்ள செய்யும் ஒரு முயற்சி என்றே சொல்லலாம் இந்த "நான் வித்யா" புத்தகம்.


முன்று வருடங்களுக்கு முன் ஜூனியர் விகடன் பத்திரிகையில் கௌதம் மேனன்னை சாரமாறியாக திட்டி இவர் அளித்த பேட்டியின் முலமாக இவரின் வலை பூவை வாசிக்க நேர்ந்தது . இவரின் வலை பூவிலும் கௌதம் பற்றி இவ்வளவு தைரியமாக கடும் சொற்கள் உபயோகித்து உள்ளதை படிக்கும் போது இவர் மற்ற திருநங்கை போல் இல்லை வேறு மாதிரியானவர் என்று என்னை ரொம்ப ஆச்சரிய பட வைத்தார்.


முன்றாம் பாலினம் எப்படி உருவாகுகிறது என்று அறிவியல் ரீதியாக புட்டு புட்டு வைக்கலாம். ஆனால் அவர்களின் மன வேதனையை எந்த ஒரு அறிவியலாலும் சொல்ல முடியாது. ஆணும் அல்லாமல் பெண்ணும் அல்லாமல் இவர் பட்ட வேதனைகளை மிகவும் வலியுடன் எழுதி உள்ளார். வித்யாவின் ஆரம்ப கால வாழ்கை என்பது சராசரி மனிதர்களை போன்று அம்மா, சகோதிரிகளின் அன்பு , அப்பாவின் அடி உதை மிரட்டல் என்று இருந்தாலும் சிறு வயதிலே பெண்தன்மையை இவர் அடையாளம் கொண்டு அந்த வயதில் இருந்தே ஒரு பெண்ணாக மனதுக்குள் வாழ்ந்துகொண்டு இப்பொது பெண்ணாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார். ஒரு ஆண் உருவில் இருக்கும் பெண்ணை எப்படி எல்லாம் கிண்டல் கேலி செய்கிறார்கள் என்று இவர் விலகி அதற்கு அவரின் எதிர் கருத்துகளை படிக்கும் போது ஏன் இவர்களை நாம் கிண்டல் செய்கிறோம் என்று நமக்கு நாமே கேட்டு கொள்ளும் கேள்வி எழத்தான் செய்கிறது.


பள்ளி படிப்பு , பிறகு கல்லூரி கணினியில் இளங்கலை பின்பு நாடகத்தின் மேல் இருந்த காதலால் முதுகலையில் மொழியியல், அதன் பிறகு நாடகம் , ஆண் உருவை அறுத்து ஏறிய வேண்டும் என்கிற வெறியால் புனே சென்று பிச்சை எடுக்கும் அவலம், நிர்வாணம், பின்பு திரும்ப திருச்சி , பிறகு மதுரை, இப்பொழுது சென்னை. இவ்வளவு இளவயதில் சுயசாரிதம் எழுவது என்பது யாருக்கும் பாக்கியம் கிடைக்காது. கிடைத்தாலும் அவர் இந்த அளவுக்கு தன்னை பற்றி உண்மையை சொல்லுவார என்கிற கேள்வியும் எழும் கண்டிப்பாக. கடைசியாக இவரின் புத்தகத்தில் எழுதி உள்ள இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது.


"சொர்க்கம் வேண்டும் என்று நான் கேட்கவில்லை. நரகம் வேண்டாமே என்று தான் மன்றாடுகிறேன். எனக்காகவும் என்னைப் போன்ற பிற திருநங்கைகளுக்காகவும் . புரிந்துகொள்விர்களா?""

புரியாதவர்கள் இந்த புத்தகத்தை படியுங்கள் கண்டிப்பாக புரிந்து கொள்விர்கள்.

திருநங்கைகள் வாழ்கை முறை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது , சேலத்தில் கூட திருநங்கைகள் மட்டுமே வேலை செய்யும் ஒரு உணவு விடுதியை திறந்து உள்ளார்கள்.


இந்த புத்தகத்தை படித்ததும் இவரின் பிடிவாதம் எவ்வளவு வலிமையானது , இதை செய்ய வேண்டும் என்றால் கண்டிப்பாக செய்து முடித்து விட வேண்டும் என்கிற வெறி அதற்காக எது வேண்டும் என்றாலும் செய்ய தயார் என்பதை முதுகலை படம் பெற்ற பிறகு கொஞ்சம் கூட கூச்சம் படாமல் பிச்சை எடுத்தது, இந்த வேலைக்கு தான் செல்வேன் என்று அதில் சாதித்தது என்று தான் செய்ய நினைக்கும் எல்லாவற்றையும் பொறுமையாக எடுத்த காரியம் முடியும் வரை இடையில் வந்த தடைகளை உதறி தள்ளி அசிகங்களை சகித்து கொண்டு வாழ்கையில் எதிர் நீச்சல் போட்டு கொண்டு இருக்கும் வித்யாவுக்கு என்னுடைய நேச கரங்கள் காத்து கொண்டு இருக்கிறது அவருடன் கை குலுக்க.



ரயில் பயணங்கள் - 1

சென்ற வாரம் தங்கையின் கல்யாணத்தில் கலந்து கொள்ள கோயம்புத்தூர் சென்று இருந்தேன். மாலையில் நடந்த வரவேற்பில் கலந்து கொள்ள முடியாத சுழ்நிலையில் இருந்ததால் காலையில் நடக்கும் முகுர்த்தத்தில் கண்டிப்பாக கலந்துகொள்ள சென்றேன். முன்பதிவின் இடம் கிடைக்காததால் பொது பெட்டியில் அமர்ந்து செல்ல வேண்டிய நிர்பந்தம். ரயில் நிலையம் சென்ற போது நீலகிரி எக்ஸ்பிரஸ் பொது பெட்டி நிரம்பி இருந்தது. அதில் பாதிக்கு பாதி வட மாநில ஆண்கள் ஆக்கிரமித்து இருந்தார்கள். உட்கார்வதற்கு இடம் இல்லாததால் முன்பதிவு பெட்டியில் ஏதேனும் இடம் காலியாக இருக்குமா என்று நப்பாசையில் ஒவ்வொரு பெட்டிளையும் ஒட்டி இருக்கும் சார்ட்யை பார்த்து கொண்டு வந்தேன். எல்லாம் புக் ஆகி இருந்ததால் ஏமாற்றமே மிஞ்சியது. இருந்தாலும் டிக்கெட் பரிசோதகரிடம் பேசி பார்க்கலாம் என்று அவர் வரும் வரை காத்துக்கொண்டு இருந்தேன்.

அடிக்கும் வெப்பத்திலும் கோட் போட்டு கையில் பெட்டியுடன் வருபவரை பார்த்தாலே கண்டு பிடித்து விடலாம் இவர் தான் டிக்கெட் பரிசோதகர் என்று. அவ்வாறே ஒருவர் வந்தார் யாரேனும் முந்தி கொள்வார்களோ என்கிற பயத்தில் அவர் பெட்டியில் ஏறும் முன்னரே " சார் ஓபன் டிக்கெட் தான் ஏதேனும் பர்த் கிடைக்குமா" என்று பொய்யான சிரிப்பு சிரித்து கேட்டேன். "S9ல உட்காருங்க வரேன்" என்றார், அவருக்கு என்று ஒதுக்க பட்டு இருக்கும் சைடு சீட்டில் எனக்கு முன்னர் ஒரு போலீஸ்காரர் உட்கார்ந்து இருந்தார். அவருக்கு முன்னால் காலியாக இருந்த ஒரு இடத்தில உட்கார்ந்தேன். அவரை பார்த்தேன் அவரின் கையில் ராஜேஷ்குமார் க்ரைம் நாவல். ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒருவர் ராஜேஷ்குமார் நாவல் படிப்பதை பார்க்கும் போது என்னை அறியாமல் சந்தோஷ சிரிப்பு வந்தது. அதை அவர் கவனித்து விட்டார் போல ஏன் சார் சிரிகிரிங்க என்று கேட்டு தனது கைகுட்டையால் முகத்தில் துடைத்து கொண்டார். எனக்கு கொஞ்சம் சங்கடம் ஆகிவிட்டது " ஒன்னும் இல்ல சார் ரொம்ப நாள் கழித்து ராஜேஷ்குமார் நாவலை ஒருத்தர் படிக்கிறத பார்க்கும் போதும் நான் ராஜேஷ்குமார் நாவல் படித்த நியாபகம் வந்துச்சு அதான் சிரிச்சேன்" என்ற உண்மையை சொன்னேன்.


ரசனை ஒற்றுமையோ என்னவோ இரண்டு பேரும் அரகோணம் வரும் வரை எங்களை பற்றி அறிமுகம், சொந்தபந்தம், வேலை, சேமிப்பு, படிப்பு, பொழுதுபோக்கு என்று இடைவேளை இல்லாமல் நீண்டு கொண்டு இருந்தது எங்கள் பேச்சு. அவரின் வயது 35 அல்லது 40 இருக்கும், ரொம்ப மரியாதையை குடுத்து பேசினார், கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்து இருந்ததால் அவரின் பேச்சில் மரியாதையை அவர் அறியாமல் வந்தது. டிக்கெட் பரிசோதகர் எனக்கு அடுத்த பெட்டியில் இடம் ஒதுக்கி தந்தார் இந்த முறை உண்மையான சிரிப்பு சிரித்து அவருக்கு நன்றி சொன்னேன். விடைபெறும் நேரம் என்பதால் அவரிடன் கை குலுக்கி சென்றேன். எனது சீட் நம்பர் தெரிந்து கொண்டவர் நிம்மதியாக துங்குங்க என்று சொல்லிவிடு அவர் தூங்காமல் பயணத்தை மேற்கொண்டார். அறிமுகம் இல்லாத ஒருவரிடம் அந்த ஒரு மணிநேரம் பேசியது நெருங்கிய நண்பன் இடம் பேசியதை போன்று இருந்தது.


எனக்கு குடுத்தது லோயர் பர்த் அங்கு சென்று பார்த்த போது வேறு ஒருவர் படுத்து கொண்டு இருந்தார். அவரை பார்ப்பதற்கு 50 வயதுக்கு மேல் இருக்கும் , இது என்னுடைய இடம் சார் என்றேன் மனிதர் நன்றாக தூங்கி கொண்டு இருந்தார் போல எழுந்ததும் என்னை எரித்துவிடுவது போல ஒரு பார்வை பார்த்தார். " அது எல்லாம் முடியாது வேற எங்கயோ போய் படு" என்று அவர் பேசி கொண்டு இருந்தார். எனக்கு ஒன்றும் புரியல " சார் இது எனக்கு ஒதுக்கிய இடம் நீங்க படுத்து இருக்கிங்க தப்பு உங்க மேல தான் இருக்கு முதல்ல எழுந்துரிச்சு உங்க பர்த்ல போயப்படுங்க" என்று நானும் எரிச்சலுடன் பேசினேன். எனக்கு எந்த சங்கடமும் இல்லை படுப்பதற்கு. அதை அவர் கனிவாக சொல்லி இருந்தால் கண்டிப்பாக சரி என்று சொல்லி இருப்பேன் ஆனால் ஏதோ அவரின் இடத்தை நான் கேட்டது போல என்மீது கோவபட்டது என்னையும் கோவமடைய செய்தது . அவருக்கு எதிரில் படுத்து இருந்த ஒரு பெண்மணி என்னிடம் மேல் பர்த்ல படுத்கொங்க சார் இவரால மேல ஏற முடியாது என்று வேண்டுகோள் விடுத்தார். அவரை பார்ப்பதற்கு ரொம்ப சாந்தமாக தெரிந்தார், " வேண்டுகோள சொன்ன கேக்குறேன் இவர் என்னமோ அதிகாரம் பண்றாரே?? . "மன்னிச்சிகோபா கொஞ்சம் புத்தி சுவாதினம் இல்ல இவருக்கு" என்று சொன்னார்.

ஓ நாம கூட கொஞ்சம் அவரசப்பட்டோம் என்று அவரிடம் வருத்தம் தெரிவித்து மேல் ஏறி படுக்க சென்றேன்.


என்னை யாரோ தட்டி எழுப்புவது போல இருந்தது. கண்களை திறந்தால் அந்த போலீஸ்காரர் "வடகோயம்புத்தூர் ஸ்டேஷன் வந்துடுச்சு சார் எழுந்துருங்க" என்றார். மணி பார்த்தேன் காலை 4. நன்றி கூறி கீழே இறங்கினேன் சிலர் என்னை ஒருமாதிரியாக பார்த்தார்கள். போலீஸ்காரர் வந்து எழுப்பியதை பார்த்தது நாளவோ இல்லை வேறு மாதிரி நினைத்தார்களோ என்னவோ ??


இறங்கிய பின் பார்த்தேன் அந்த பெரியவர் தலைக்கு அந்த பெண்மணி குல்லா மாட்டி விட்டு கொண்டு இருந்தார் பாசத்தின் பிணைப்பு ..