~~ROMEO~~

Everyday Starts with Happy :)

சாருவின் புத்தக வெளியிட்டு விழா : பாகம் 2

இந்த தொகுப்பை விழாவில் நடந்த சிறு சிறு சம்பவங்களை கொண்டது , அதனால் இதை விழா துளிகள் என்று வைத்து கொள்ளலாம்.

விழா ஆரம்பம் ஆனது மாலை 6 மணிக்கு, நான் அரங்கத்துக்கு 5 மணிக்கே சென்றுவிட்டேன். கூட்டம் அவ்வளவு இல்லை. அகநாழிகை புத்தக வெளியீட்டு விழாவில் கடைசில் உட்கார்ந்து இருந்ததால் சாரு பேசுவதை என்னால் சரியாக கேட்க முடியவில்லை இந்த முறை முன்னாடி உட்கார்ந்து கொண்டேன். சிறிது நேரத்தில் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இருக்கைகளை ஆக்கிரமித்து கொண்டு இருந்தார்கள். அன்பர் ஒருவர் சிற்றுண்டி தயாராக இருக்கிறது சாப்பிட வாருங்கள் என்று அழைத்தார். கேசரி, வடை , பணியாரம் என்று ரசனைகார மனிதர் ரசனையாக உபசரித்து இருந்தார். கரும்பு திண்ண கூலி என்பார்களே அது இதுதான்.


தல கேபிள் சங்கர்க்கு போன் பண்ணினேன், என்ன தல எப்போ வருவிங்க என்றேன். கிளம்பி கொண்டே இருக்குறேன் என்றவர் , என்ன அரங்கத்தில் ஒரு 100பேர் இருப்பார்களா என்றார், அந்த சமயத்தில் கூட்டம் அவ்வளவு கூட இல்லை நானும் ஆமாம் என்றேன். விழா ஆரமித்து மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது, உட்கார இருக்கை இல்லாமல் நிறைய அன்பர்கள் நின்று கொண்டே விழாவை பார்த்துகொண்டு இருந்தார்கள். பதிவர்கள் நிறைய பேர் வந்து இருந்தார்கள், சிறிது நேரத்தில் கேபிள் சங்கர் வந்தார் எனது பேச்சை நம்பி லேட் ஆகா வந்தாரா என்று தெரியவில்லை அவரும் நின்று கொண்டே விழாவை கண்டுகளித்தார். பதிவர்கள் Butterfly சூர்யா, முரளிகண்ணன், லக்கி லுக், அதிஷா, நர்சிம், நிலாரசிகன், அடலேறு, தண்டோரா என்று எனக்கு நன்கு தெரிந்த முகங்களை பார்த்ததில் கொஞ்சம் சந்தோசம்.

விழா ஆரமிப்பதற்கு முன் கவிஞர் மனுஷ புத்திரன் அவர்களின் புத்திரன் புத்திரி போட்ட ஆட்டம் அரங்கை கொஞ்ச நேரம் ரசிக வைத்தது. மகன் இவரை ஹமிது ஹமிது என்று எல்லோருக்கும் கேட்கும் படி உரக்க கத்திகொண்டே இருந்தார். குழந்தைகளை பார்பதற்கு என்றே செல்வி , பெரியம்மா ஒருவர் மற்றும் 2 அன்பர்கள் என்று மாறி மாறி இவர்களை அரங்கத்தை விட்டு வெளியே கூட்டி செல்வதும், பிறகு உள்ளே வருவது என்று இருந்தார்கள்.

எதாவது விழா அல்லது எங்காவது செல்லவேண்டும் என்று கிளம்பும் போது கண்டிப்பாக கேமரா எடுத்து வைத்து கொள்ளவேன். ஏன் என்று தெரியவில்லை அன்று எடுத்து வைக்க மறந்துவிட்டேன், கொஞ்சம் கவலையில் ஆழ்ந்து இருந்தேன் அந்த நேரம் பார்த்து நண்பன் ஒருவர் போன் செய்தான், அவன் மீது கொஞ்சம் எரிச்சல் அடைந்தேன், ஏன் என்றால் என் கையில் கேமரா இருப்பதை அவன் பார்த்துவிட்டால் அவ்வளவுதான் என்னை போட்டோ எடு போட்டோ எடு என்று நச்சரிப்பான். இவனை எல்லாம் போட்டோ எடுத்தோமே சாருவை போட்டோ எடுக்க முடியாம போய்விட்டதே என்கிற கவலை.

எனது அருகில் ஒரு அன்பர் உட்கார்ந்து கொண்டு இருந்தார், விழா ஆரமித்து நெடு நேரம் கை தட்டவில்லை அரங்கமே கை தட்டும், சிரிக்கும் ஆனால் இவர் தேமே என்று உட்கார்ந்து கொண்டு இருந்தார். கையில் ஒரு நோட் எடுத்து சுருக்கெழுத்து மூலம் விழாவை தனது பேனாவின் துணையுடன் பதிவு செய்துகொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் இவரும் கை தட்டுவது, சிரிப்பது என்று இருந்தார். இவருக்கு நேர் மாறாக இருந்தார் எனக்கு பின்னால் இருந்தவர் , இவர் சிரிப்பது அரங்கமே கேட்க வேண்டும் என்று சிரித்தாரா தெரியவில்லை, செம பேஸ் வாய்ஸ் அவருக்கு. எனது அருகில் இருந்தவர் அனைத்து விருந்தினர்கள் பேசையும் குறிப்பேடுத்தவர் சாரு பேச ஆரமிக்கும் போது தனது இருக்கையை விட்டு எழுந்து போய்விட்டார். விழாவின் நாயகனே சாருதான் ஆனால் அவரின் பேச்சை மட்டும் குறிப்பேடுக்காமல் அப்பறம் என்ன இதுக்காக வந்தார் என்று தெரியவில்லை.

4 மணிநேரம் எப்படி விழா சென்றது என்று தெரியவில்லை. கொஞ்சம் கூட அலுப்பு தட்டாமல் இருந்தது அனைவரின் பேச்சும். விழா 5 மணிக்கு ஆரமித்து இருந்தால் என்னை போன்று தூரத்தில் இருந்து வரும் அம்பர்களுக்கு கொஞ்சம் சவுகரியமாக இருக்கும் வீட்டுக்கு செல்ல. அடுத்த வருடம் இதே மாதிரி 10 புத்தகங்களை வெளியிடமாட்டேன் ஒரே ஒரு புத்தகம் தான் அதும் நாவல் என்றார் சாரு. அந்த புத்தகம் வெளியாவதற்கு முன்பே இந்த புத்தகங்களை படித்து விடவேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்குறேன். பார்க்கலாம்.

சாருவின் புத்தக வெளியிட்டு விழா


சாருவை நான் எப்படி எல்லாம் கொண்டாடுவேன் என்று எனக்கே தெரியாது. அவரின் எழுத்துகளுக்கு அடிமை என்றே சொல்லலாம் அவ்வளவு வெறி அவரின் எழுத்துகளை படிப்பதற்கு. இணையத்தளத்தில் இவரின் வலைதளத்தை திறக்காத நாள் இல்லை.இன்று என்ன எழுதி இருப்பார் என்று தினமும் அவரின் வலைத்தளத்துக்கு சென்று வருவேன். நான் கொண்டாடும் எழுத்தாளரின் புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டேன்.

சாருவின் 10 புத்தகங்கள் வெளியீட்டு விழா, சென்ற சனிக்கிழமை மாலை பிலிம் சேம்பர் ஹாலில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டேன். தனது வசீகர குரலால் தொகுத்து வழங்கினார் நிர்மலா பெரியசாமி. கவிஞர் மனுஷபுத்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார். முதும் பெரும் எழுத்தாளர் கந்தசாமி புத்தகங்களை வெளியிட எஸ். ராமகிருஷ்ணன், அழகிய பெரியவன், பாரதி கிருஷ்ணகுமார் , ஷாஜி, மதன் பாப், இயக்குனர் மிஷ்கின் , இயக்குனர் வசந்தபாலன், திருநங்கை கல்கி, செல்வி , அவந்திகா போன்றோர் பெற்று கொண்டனர்.


எழுத்தாளர் கந்தசாமி பேச்சில் சாரு எழுதுவதை ரொம்ப ரசனையாக சொன்னார். இவரின் பேச்சை கேட்கும் போது இலக்கிய உலகில் பலமான அனுபவம் கொண்டவர் என்று தெரிந்தது.


அழகிய பெரியவனின் பேச்சு ஆரம்பம் முதல் கடைசி வரை ரொம்ப சீரியஸ் டைப்ஆக இருந்தது. சிறுபான்மை இனத்தவர்கள் மீது நடைபெறும் வன்முறைகளை கடுமையாக எதிர்த்தார், அதே சமயம் ஹிந்துத்தவாதிகள் மற்றும் ஜெயமோகன் அவர்களை கடுமையாக விமர்சித்தார்.

மதன் பாப் எதற்கு அழைத்தார் என்று தெரியவில்லை, அவர் என்ன பேச வருகிறார் என்றும் தெரியவில்லை. சிரித்தார் பேசினரே தவிர சிந்திக்க ஒன்றும் இல்லை அவரின் பேச்சில்.

ஷாஜி ரொம்ப சாதரணமாக ஆரமித்து நகைச்சுவையாக பேசினார். சாருவுடன் தனக்கு இருக்கும் நட்பு, அவரின் எழுத்துகளை தான் எப்படி எல்லாம் மொழி மாற்றம் செய்கிறேன் என்றும். மலையாள இலக்கிய உலகில் இவருக்கு இருக்கும் மரியாதையை முதலில் பேசிவிட்டு, கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் என்கிற புத்தகத்தில் உள்ள முக்கால் வாசி தலைப்புகளை பற்றி பேசி அமர்ந்தார். மிக நீண்ட பேச்சு இவருடையது.

தனது குழந்தைக்கு உடம்பு சரியில்லாத போதும் விழாவில் கலந்து கொண்டு அருமையாக பேசினார் இயக்குனர் வசந்தபாலன். தனது வெயில் படத்தை சாரு விமர்சிக்காத குறையை அங்கே பகிர்ந்து கொண்டார். அமீர்க்கு கிடைக்க போகும் மிளகா பொடியை நாசுக்காக வெளிபடுத்தினார், தமிழ் சினிமாவை சாரு கிழி கிழி என்று கிழிப்பதை சிரித்து கொண்டே சொன்னவர், ஒரு படம் நன்றாக இல்லையென்றால் எப்படி எல்லாம் கிழிபாரோ அதே சமயம் நன்றாக இருக்கும் படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதை சொல்லி சந்தோசப்பட்டார்.

கல்கி பேசும் போது தங்கள் பாலினத்தவர்கள் சமுதாயத்தில் எப்படி எல்லாம் வஞ்சிக்கபடுகிறார்கள் என்று பேசினார். எந்த பார்வையாளனும் இடையில் கைதட்டாமல் கேட்ட ஒரே விருந்தினர் பேச்சு இவருடையது தான். அது ஏன் என்று தெரியவில்லை ஒருவேளை இவர் மாற்று பாலினத்தை சேர்ந்தவரா அல்லது இவரின் பேச்சு மற்றவர்களை போல ரசனை இல்லாததால் என்று தெரியவில்லை. பேச்சை முடிக்கும் முன்னர் தனக்கு அவ்வளவுவாக மேடைகளில் பேசவராது என்று ஒத்துக்கொண்டார்.

பாரதி கிருஷ்ணன் பேச்சு ரொம்ப சுவாரசியமாகவும் , நகைச்சுவையுடனும் ஆரமித்தது நேரம் செல்ல செல்ல இவரின் பேச்சு ரொம்ப சிரியஸ் ஆக சென்றது. கீழ் வெண்மணியில் நடந்த தலித் படுகொலை, கும்பகோணத்தில் நடந்த தீ விபத்தில் பலியான 94 குழந்தைகள் என்று இவரின் பேச்சு அனல் கக்கியது , நிதிபதிகளை கூட விட்டு வைக்காமல் அடித்து விள்ளசினார். இவர் இடையில் சொன்ன ஒரு வார்த்தை என்ன என்று எனது மண்டையை போட்டு குழப்பி கொண்டேன். அந்த கேள்வி என்னவென்று கடைசில் கேட்கிறேன் பதில் தெரிந்தவர்கள் பின்னுடத்தில் சொல்லவும்.

எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் பேசும் போது தனக்கும் தனது வாசகர் இருவருக்கும் நடந்த கடித போக்குவரத்தை சுவைப்பட சொன்னார். சாரு இங்கே உட்கார்ந்து கொண்டு மலாவி தேசத்தை எப்படி எல்லாம் வர்ணித்தார் அதற்கு அவரின் வாசகர் ஆனந்த் அதை எப்படி எடுத்து கொண்டார் என்றும், அந்த புத்தகத்தை படிக்கும் போது சாரு மலாவி தேசத்தில் இருப்பதாய் போன்றும் ஆனந்த் மயிலாப்பூரில் இருப்பது போன்றும் இருக்கிறது என்றார். அருமையான எழுத்தாளர் இவரின் புத்தகவெளியிட்டு விழாவிற்கு செல்லாமல் இருந்தது எனக்கு ஏமாற்றமே.

இயக்குனர் மிஷ்கின் பேச்சு அதி தீவிர இலக்கிய படிப்பாளி போன்று இருந்தது, வாயில் நுழைய தெரியாத பெயர்களை எல்லாம் சொன்னார் , நினைவுபடுத்தி பார்கிறேன் !!!! சுத்தம் ஒருத்தர் பெயரும் நினைவுக்கு வரவில்லை. சாருவிற்கு தான் எப்படி அறிமுகம் ஆனேன் என்று சொன்னதை கேட்டு அரங்கத்தில் இருந்த அணைத்து அன்பர்களும் நெடு நேரம் கைதட்டினார்கள். தனது நந்தலாலா படம் பற்றி சிரிது நேரம் பேசி அந்த கதை எனது அண்ணன்னின் பதிப்புதான் என்றதும் அரங்கமே சிரிது நேரம் அமைதியாக இருந்தது என்பதே உண்மை. ரசனைகார மனிதர் சாருவை போலவே தண்ணி அடிப்பதை சந்தோசமாக ஒத்து கொண்டார். சாருவுடன் சேர்ந்து தண்ணி அடிக்க போகிற நாளை எதிர்பார்த்து கொண்டு இருப்பதாக உண்மையை அரங்கத்தில் பகிர்ந்து கொண்டார்.


கடைசியாக விழாவின் நாயகன் சாரு பேசும் போது எப்பயும் போல நக்கல் நையாண்டி என்று இவரின் எழுத்துகளை போல இருந்தது பேச்சு. தனக்கு உடம்பு சரியில்லாத போதும் உயிர்மை பதிப்பகத்தில் செலவிட்ட நாட்களையும், தள்ளாடி நடந்து என்ற போது கூட தான் தண்ணி அடித்து வந்து இருக்கிறேன் என்று நினைத்து கொண்ட உயிர்மையில் வேலை செய்யும் அன்பர்கள் என்று சிரித்து கொண்டே சொன்னார். மறக்காமல் தனக்கு உதவி செய்த அணைத்து அன்பர்களுக்கும் நன்றியை சொன்னார். மதன் பாப் ரொம்ப ரசனைகார மனிதர் இப்பொது கூட தண்ணி அடிப்பதை தனது வீட்டில் வைத்து கொள்ளலாம் வாங்க என்கிற உண்மையை சபையில் நகைச்சுவையுடன் பேசினார். அகநாழிகை புத்தக வெளியிட்டு விழாவில் தான் இவரின் பேச்சை முதல் முதலில் கேட்டேன், அன்று என்னை யாரவது பார்த்து இருந்தார்கள் என்றால் என்னை பார்த்து சிரித்திருப்பார்கள். உண்மையில் வாயை திறந்து கொண்டு தான் நான் இவரின் பேச்சை கேட்டு கொண்டு இருந்தேன். மிக பெரிய சந்தோசத்தை குடுத்த நாள் அது.

கேள்வி : நிர்வாணம் அல்லது அம்மணம் அல்லது ??? அந்த வார்த்தை என்ன ?? பதில் தெரியுமா ?




விழாவை பற்றி எழுத இன்னும் இருக்கிறது அதனால் இரண்டு பகுதியாக எழுதுகிறேன். விழாவில் நடந்த சில சுவாரசியமான தொகுப்பு அடுத்த பதிவில் .

ரயில் பயணங்கள் - 3


ஒரு முறை தப்பு செய்தல் அதை தெரியாமல் செய்து விட்டதாக எண்ணி மன்னித்து விடலாம், ஆனால் அதுவே இரண்டு மூன்று முறை நடந்தால்??

நேற்று மாலைமலர் பத்திரிகையில் வெளிவந்த செய்தி ஒன்று.

தண்டையார்பேட்டை ரெயில் நிலையத்தில் 40 மூட்டை ரேசன் அரிசி சிக்கியது: ஆந்திராவுக்கு கடத்த முயன்ற கும்பல் தப்பி ஓட்டம்

இந்த நியூஸ் படிக்கும் போது எனக்கு சிரிப்புதான் வருது. ஏதோ பெரிய விஷத்தை இவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள் என்று கொட்டை எழுத்துகளில் இருக்கிறது. தினமும் சென்னையில் இருந்து சூலூர்பேட்டை செல்லும்அனைத்து மின்தொடர் ரயில் வண்டிகளில் சின்ன சின்ன பைகளாக எப்படியும் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதுஎன்பதை கண் கூடாக பார்கிறேன் .

சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் இருந்து கும்மிடிபூண்டி மார்கமாக சூலூர்ப்பேட்டை செல்லும் மின்சார ரயில் வண்டியில் நடக்கும் அநியாங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை.

தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் ரேஷன் அரிசி விநியோகம் செய்கிறது, அந்த அரிசி எல்லாம் மொத்தமாக அந்த ஏழை எளிய மக்களுக்கு செல்கிறது என்றால் அது சுத்த பொய்.

சென்னை மாநகரில் இருக்கும் முக்கால் வாசி ரேஷன் கடைகளில் முன்னால் ஒரு பெண்மணி பார்ப்பதற்கு ரொம்ப சாது போல அல்லது எதையோ எதிர்ப்பார்த்து கொண்டு இருப்பார். அரிசி வாங்க வரும் மக்கள் யாராவது ஒருவரை எதிர் பார்த்து கொண்டு இருப்பார். 1 ருபாய் குடுத்து அரிசி வாங்கும் ஒருவரிடம் நைசாக பேசி அந்த அரிசியை 3 ருபாய் முதல் 5 ருபாய் வரை அவர்களிடம் இருக்கும் அரிசியை இவர் வங்கி கொள்வார்.

இப்படி வாங்கும் அரிசி எல்லாம் இரண்டு வழித்தடங்களில் ஆந்திரா மாநிலத்துக்கு கடத்தப்படுகிறது. திருத்தனி மார்கமாகவும், கும்மிடிபுண்டி மார்கமாகவும் மின்சார ரயில் வண்டியில் கடத்துகிறார்கள். இதற்கு ரயில்வே போலீசில் வேலை செய்யும் பல கருப்பு ஆடுகள் துணை போகிறது. சென்ற மாதம் வெளியான ஒரு தினசரி பத்திரிகையில் போலீஸ்காரர் ஒருவர் மாமுல் வாங்கி அதை தனது தொப்பிக்குள் மறைத்து வைப்பதை படத்துடன் வெளியிட்டு இருந்தது. இது எல்லாம் எப்போதும் நடக்கும் ஒன்று.

சூலூர்ப்பேட்டை செல்லும் வண்டியில் இவர்கள் அதை எடுத்து செல்லும் முறையே வேறு. யாரும் அதை சாக்குமுட்டையில் அடைத்து செல்வதுயில்லை. கிடைக்கும் துணிபை அல்லது மீன் சுமந்து செல்லும் குண்டாவில் யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி தான் எடுத்து செல்கிறார்கள். ஒருவர் கண்டிப்பாக 100 கிலோக்கு கம்மியாக எடுத்து செல்வதுயில்லை.


ரயில் வண்டியில் இவர்கள் எடுத்து செல்லும் போது அந்த மூடைகளை சீட்க்கு அடியில் பதுக்கி வைத்து விடுகிறார்கள், ரயில் வண்டியோ ஸ்டேஷன்னில் நிற்பது ஒரு நிமிடத்துக்குள் தான் இருக்கும் அதற்குள் அவசர அவசரமாக எல்லாவற்றையும் ஏத்தி விடுவார்கள், (இதை ஏற்றுவதற்கு என்று ஒருவர் துணைக்கு வருவார்). இந்த கடத்தல் தொழிலை முழுக்க முழுக்க செய்வது பெண்கள் என்பது தான் கொடுமை. பார்ப்பதற்கு ரொம்ப பாவப்பட்ட ஜென்மம் போல இருக்கும் அவர்களின் தோற்றம். சீட்டு அடியில் பதுக்கி வைத்த பிறகு ஒன்றும் தெரியாத மாதிரி கதவு ஓரத்தில் உட்கார்ந்து விடுவார்கள். ஆனால் அவர்கள் பார்வை எல்லாம் அந்த அரிசி மூட்டையின் மேல் தான் இருக்கும்.

நம் கண்முன்னே நடக்கும் இந்த கொடுமையை தட்டி கேட்ட முடியாது. கேட்டால் அவ்வளவு தான் அங்கேயே மானத்தை வாங்கி விடுவார்கள். அவர்களின் அர்ச்சனையை காது குடுத்து கேட்டக முடியாது.

இந்த கடத்தல் தொழில் பற்றி எனக்கு முதலில் ஏதும் தெரியாமல் ஒரு பெண்மணிக்கு உதவி செய்து இருக்கிறேன். பார்பதற்கு ரொம்ப பாவமாக இருந்தார் , துணி மூட்டை போல ஒன்றை சுமந்து வந்தார். அதை இறக்கி வைக்க கொஞ்சம் உதவினேன். எனது செயலை சிலர் மர்மமாக பார்த்தார்கள் அப்பொழுது எனக்கு தெரியவில்லை இது எல்லாம் கடத்தல் என்று . அந்த பெண்மணி எல்லா சீட்க்கு அடியலயும் அதை பதுக்கி வைத்தார், அடுத்த நாள் இதே போன்று அவர் செய்தார் , அப்போது தான் கொஞ்சம் சந்தேகபட்டேன், நண்பன் ஒருவனிடம் இதை பற்றி கேட்கும் போதுதான் தெரிந்தது இந்த கடத்தல் எல்லாம்.

கடத்தல் என்பது பெரிய பெரிய லாரி அல்லது பார்சல் வழியாக செய்வது மட்டும் இல்லை, சின்ன சின்னதாக செய்வதும் கூட தான் இதைபோன்று. இந்த மார்கமாக செல்லும் வண்டிகளில் குறைந்தது 20 பேர் இந்த மாதிரியான கடத்தல் வேலையில் ஈடுபடுகிறார்கள்.

இதை எல்லாம் எப்படி தடுக்க போகிறார்களோ. ஆண்டவனுக்கே வெளிச்சம் ..